வறண்ட வாழ்வின் உயிர்ப்பு
பூச்சியத்துடன் புணர்ந்த காத்திருப்பு
ஓரிரு நாட்கள்தான்..
காத்திரு என்றாய்
காத்திருந்தேன்....
பல வருடங்களும்
வந்தன- கடந்தன..
பல கால்களும்
கடந்து சென்றன..
ஒரு நாள்
உன் கால்களும்
வந்தன ...
கடந்தன..;
'கிடப்பது எதற்காய்
என்று கூடக் கேட்காமலே..!
சஞ்சலமும் கொஞ்சம் ஆறுதலும்
மணற் பரப்பை கந்தலாக்கிக் கிடக்கும்
சிகரட் பெட்டிகள்,
முனை கருகிய ஃபில்டர்கள்,
விரல் சுடுமளவு எரியவிடப்பட்ட
ரஜனி பீடிகளின் நுணித் துண்டுகளிடமிருந்து
உயிர் குடித்த வெறியின்
உளறல்
அடங்கிப் போன பின்பான
நிசப்தத்தைக் கேட்டு
மனம் சஞ்சலப்பட்டாலும்
அவைகளின்
உற்பத்தி,வினியோக விற்பனையை ஒட்டிய
பலரின் வாழ்வாதாரக் கிடைப்பின்
முனகல் சப்தம்
கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.
நடித்தல் நிர்ப்பந்தமகிவிடும்
உட்கிடைகளை
முழு நிர்வாணமாக வெளிப்படுத்தும்
தெளிந்த நீரோடையைப் போல
மனதை இயன்றளவு வெளிப்படுத்தினாலும்
மறைத்தல் பற்றிய நாடகத்தின்
ஒரு பாத்திரத்தை ஏற்றிருப்பதாகவே
நெருங்கிப் பழகுபவர்களும்
புரிந்துகொள்வது குறித்த கவலைகள்
அவ்வப்போது
கலக்கமுறச் செய்துவிடுகிறது.
மறைத்தலே
வாழ்வாகிப் போனவர்களிடமிருந்து
இதனைவிட
வேறெதனை எதிர்பார்க்க முடியும்..?
இத்தகையதொரு சமூகத்தில்தான்
வாழ வேண்டி சபிக்கப்பட்டிருப்பதால்
காலவோட்டத்தில்
நிஜமாகவே நடிக்கத் துவங்குவது
நிர்ப்பந்தமாய் ஆகிவிடும்
ஆதலால்
இது குறித்து
இனியும்
நொந்து கொள்வதாயில்லை.
ஹைக்கூ -கொஞ்சம் சலனம்-
தூரத்து இருளில்
கலர் கலர் வெளிச்சப் பொட்டுக்கள்
வீடு வாகனம் கடை ஹோட்டல்.
குளத்து நீர்ப்பரப்பில்
சிறு கல் விழுந்த சப்தம்
வானமே திடுக்குற்று விழித்துக் கொண்டது.
ஏற்றிவைத்த விளக்கு அணைந்தது
அறையில்
புத்தகங்களும் இல்லை கண்களும் இல்லை.
பரந்து விரிந்த நீலச்சுவரில்
உயிரிகளுக்காய் உருவான 3Dஓவியங்கள்
மேகங்கள் அசைகின்றன.
மாரிகாலப் பின்னேரப் பொழுதில்
மரத்தின் கீழ் மட்டும்
ஒரு நொடி மழைச் சீறல்;
வந்த காகம் கிழையில் குந்தியது.
பாலைவனம் நெடுகிலும்
தன் உயிர் தேடித்திரிகிறான்
நீருமில்லை காணலுமில்லை.
பச்சைக் குச்சித் துண்டின் உசுப்பலால்
இலையொண்று அசைகிறது
பாய்ந்து விழுந்த வெட்டுக் கிளி.
காலை நேரக் காகம்
வீட்டுக் கூரை மீதிருந்து கத்துகிறது
வீட்டில் எவருமில்லை.
வீதியால் வந்தவர்களும் போனவர்களும்
வாரிச் சுறுட்டிக்கொண்டு ஓடி ஒதுங்குகிறார்கள்
காற்றும் மழையும் கைகலப்பு.
பரபரத்த இரவின்
நகரவெளி மீதான அசைவு
உறைந்த அடுத்த நொடி உடைகிறது;
மின்சாரத்தின் கண்சிமிட்டல்.
கெளிந்த தோணியின்
கிளம்பிய கொல்லாவிலிருந்து கூப்பாடு
குந்தியிருந்த காகம் கத்துகிறது.
இன்று அணிந்து கொண்ட 'சூ'
வெளிறிப் பொலிவிளந்து கிடக்கிறது
துடைத்துவிடாத நேற்றயப் புழுதி.
றாக்கை நிறைய
புழுதி படிந்த தடித்த புத்தகங்கள்
சிலந்தி கறையான் பூச்சிகளைத் தவிர
அறையில் எவருமில்லை.
மேசையிலிருந்த குப்பைத் தொட்டியில்
எழுதப்படாத காகிதங்கள் எல்லாம்
கசங்கிக் கிடக்கின்றன.
குறுக்கீடுகளால்
சிறகசைத்து அலையும்
சிறு தும்பி , வண்ணாத்திகளின்
குறுக்கிடுகளும்
மனதை பதைக்கச் செய்துவிடுகின்றன;
என் உயிரின் நடு மண்டையை நோக்கி
யாரோ சுத்தியலால்
பட்டுவிடாமல் ஓங்கி யோங்கி
பதறச் செய்வதைப் போல...
தேவையான தாக்குதல்தான்
வாழ்க்கைப் பாதை எங்கிலும்
பழக்கப்பட்டதும் அன்னியதுமான
துன்பங்கள் பல
பதுங்கிக் கிடக்கின்றன.
ஒவ்வொண்றும்
கணக்காய்க் காத்துக் கிடந்து
திடுமெனத் தாக்கிவிடுகின்றன
கொரில்லா வாக்கில்...
தாக்குதல்களில் அதிகமானவை
முன்கூட்டியே
தவிர்க்க முடியாதவைகள் தான்..
தேவைப் படுவதெல்லாம்
தாங்கிக் கொள்ளும் தைரியம் தான்..
ஒரு விததில்
இத்தகைய தாக்குதல்கள்
ஓளிக்குத் தேவையான இருள் போல்
அவசியமானதும் தான்..
'இருளை மறுதலித்து
ஓளியை அனுபவித்து விடலாமா என்ன..!..?
கொணக்கர்கள்...
கொணக்குப் பிடித்த ஒருவனின்
களிசறத்தனம்
தெருவில் கிடந்த
கொங்கிறீட் கல்லிலும்
சற்றுத்தள்ளி
மலம் கழித்துக் கொண்டிருந்த
தெரு நாயிலும்
தாண்டவமாடி விட்டது...
தெறித்து விழுந்த
நாயும் கல்லும்
ரத்த விலிகளுடன்
வெடுக்கெனப் பிரிந்தன..
வைத்த குறி தப்பாதது கண்ட
கொணக்கன்
சாதனை செய்த பெருமிதத்தோடு
கிளம்பி விட்டான்..
வலிந்து ரத்தம் பூசப்பட்ட
கொங்கிறீட் கல்லும்
பூசுவதற்கு ரத்தம் கொடுத்துவிட
நிர்ப்பந்திக்கப்பட்ட
தெரு நாயும்
இரு நாள் கடந்த சந்திப்பில்
பேசிக் கொண்டன..
"சில மனிச ஜென்மங்கள்
தங்களோட மசிரைப் புடுங்குவதும் இல்லை
மத்தவங்கட மசிரை விட்டு வைப்பதும் இல்லை"
லொள்...லொள்.....
இதுவும் மாறிவிடும்
வீதியோரப் புழுதிக்குள்
சொறி நாய்களுடன் சொறியர்களாய்
சுறுண்டு கிடக்கும்
அந்த ஜீவன்களைப் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
அறுநூறிலிருந்து
இருநூறிற்கு இறங்கி வந்து
வருமாறு கெஞ்சிய
அவள் மனவெதனம் அறியாது
வேசையென்று விரட்டியடித்த
என் நண்பன்,
விரக்தியுடன் விட்டகண்ற
அந்தப் பெண்
இருவரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
திருமணச் சந்தையில்
தம் மகன்களின் குறியை
ஆர்வத்தோடு ஏலம் போடும்
பெற்றோரகள்,
தம் மகள்களின் வாய்க்குள்
கிராக்கியான ஏலத்தைத்தான்
திணிக்க வேண்டும்-என்ற
இலட்சியத் தாகத்தோடு
போட்டி போடும் பெற்றோரகள்,
இவர்களையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
ஆசை தீரப் புணர்வதற்கும்
பிள்ளை குட்டிகளை
பேண்டு தள்ளுவதற்கும்
வெடுக்கெடுக்கும் உள்ளாடைகளை
களுவிக் காயப் போடவும்
குசினிக்குள் புளுங்குவதற்கும் தான்
மனைவி என்றெண்ணும்
கணவர்களையும்
மனம் கல்லாய்ப் போன
கணவனின் காலை
காலமெல்லாம்
கண்ணீரால் கழுவிக் கொண்டு
அவன் காலுக்கடியிலேயே
மிதி பட்டுக் கசங்கும்
மனைவி மண்ணாங் கட்டிகளையும்
பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
மக்களால் மக்களுக்காக என்று
ஜனநோயகம் பரப்பி
மக்களை மாக்களாக்கும்
அரசியல் வாயாடிகள்,
கறிவேப்பிலையாய்த் தான்
வறுக்கப் படுகிறோம் என்று
தெரிந்தே கருகும் தொண்டர்கள்,
பேயப்படுவது
மூத்திரம் தான் என்று
தெரிந்தே ஆவண்டு பிடிக்கும்
வாக்காளர்கள்,
என்று எல்லோரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
கோவிலில் இருந்து பள்ளிவாசலுக்கும்
பள்ளிவாசலில் இருந்து பன்சலைக்கும்
பன்சலையில் இருந்து கோவிலுக்கும்
கோவிலில் இருந்து சர்ச்சுகளுக்கும்..
மீண்டும் மீழ்சுழற்ச்சி
எதிர்ச் சுழற்ச்சி, குறுக்குச் சுழற்ச்சி
என்றவாறாக
ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கும்
ஏனையவற்றிற்கும்-போதாக்குறைக்கு
ஒரு பள்ளிவாசலில் இருந்து பக்கத்து பள்ளிக்கும்
ஒரு கோவிலில் இருந்து அடுத்த கோவிலிற்கு
துப்பாக்கித் தோட்டாக்களையும்
வெடிகுண்டுகளையும்
காணிக்கைகளாக செலுத்திக் கொண்டிருக்கும்
மத வெறியர்கள்,
அவர்கள் வெறியாட்டங்களுக்குள்
சிக்கிச் சப்பழிஞ்சி போகும்
சாதரணங்கள்,
சகலரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
உடலில் உயிர் ஒட்டியிருப்பதால்
மாத்திரமே
வாழ்ந்து கொண்டிருக்கும்
நானும்
என்போன்ற பலரையும்
பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
மறத்தல் பற்றிய நினைவு
தினமும் நினைக்கிறேன்
அந்த அதனை மறந்துவிட..
அந்த அதுவும் நினைக்கிறது
மறக்காமல் நினைவு படுத்திவிட..
மறத்தலுக்காய் நினைத்ததால்
நினைத்தலில் நனைந்த மறதி
ஈர ஆடை களைய
மறக்க நினைத்த அத்தனையும்
மொத்தமாய் முகம் காட்டுகின்றன..
எனதான
முயற்சிகள் மொத்தமும்
நொடிக்கு நொடி தோல்வியே..!
என் சமாதி மேலாவது
எழுதிவிடுங்கள்
"அவை எதனையும்
இவன் மறந்துவிட்டான்" என்று..!
அணைக்காமல் விட்ட மின்குமிழால்...
யார் உள்ளே..?
எத்தனை முறைதான் கேட்பது
உள்ளே யார்..?
காத்திருந்ததில்,கத்தியதில்
கால் கடுக்க
தொண்டை வலிக்க
மனம் கடுப்பாகி விட்டது.
யார் என்றாலும் பரவாயில்லை
உடன் வெளிக்கு வரவேண்டும்.
இதற்கு மேல்
கொஞ்சமும் அடக்க முடியாது;
ஆத்திரத்தை அல்ல
முட்டி நிற்கும் மூத்திரத்தை...
உள்ளே இருப்பவர்
என்னுடன் பேசமாட்டாரா..?
ஏன் பதில் எதுவும்
சொல்லவில்லை..?
ஒரு வேளை
உள்ளே யாருமே இல்லையா..?
யாரும் இல்லை என்று
எவரும் சொல்லவில்லையே...
எவரும் சொல்லாத்தால்
யாரும் இல்லையோ...
பின் எதற்காக
எரியும் மின்குமிழ்
இருப்பதாய் சுட்டுகிறது..?..!
தனி உலகில் தனிக்கற ராஜாவாம்
அவன் இயலாமையின் மீது சமூகத்து எதிர்பார்ப்புகள் உமிழ்ந்து கொண்டிருக்கும் எச்சில்களை கொஞ்ச மாச்சிலும் வழித்து உதறிவிட அவனை ஆட்டிப் படைக்கும் பொல்லாப் போன சுயம் இம்மியளவும் இடம் தருவதாய் இல்லை.
அவனைப் பொறுத்த வரைக்கும் அவன் ஒரு தனி உலகாம் அவன் சுயம் அவ்வுலகத்து தனிக்கற ராஜாவாம் ராஜாவின் விருப்பங்கள் தான் அவ்வுலகின் நிகழ்வுகளாம்...
பிறகு எப்படித் தான் வேற்றுக் கிரக வாசிகளின் எதிர்பார்ப்புகள் அவன் உலகில் வாழ்வியல் முறைவழியாக முடியும்..?
அவன் நிலைப்பாடு தான் அது என்றான பிறகு எந்த சமூகமும் காரி உமிழ்ந்தென்ன..? முக்கி மூத்திரமே பேய்ந்தென்ன..? அவன் சுயம் தான் அவை எதையுமே உணர விரும்ப வில்லையே...
பயத்தினால் பயத்தில் பயத்துடன்
நடிச்சாம்
இறுகிய இருட்டில்
கடற்கரையை அடுத்துள்ள
குப்பைகள் கலைந்த ரோட்டில்
நான் மட்டும் தட்டத்தனியாக...
காற்றுடன் சண்டை போடும்
கடலலைகளது பின்னணி இசையில்
மையவாடியிலிருந்த நாய்களின்
கௌசிப் பேய்ச் சத்தங்கள்...
போதாக் குறைக்கு
காதைக் கனகாட்டுப் படுத்தும்
சில்லூரிகளின் சுல்சுலுப்பு...
வந்தடைந்து
ஓரிரு நொடி நகர்ந்திடாத போதும்
ஓட்டின் இடுவல் பார்த்துப் புகுந்து
சுவர்வழி கசிந்தொழுகும் மழை நீராய்
என்னுள் நுளைந்த பயம்
கண் கை கால் வாய் வழியாக
கசியத் தொடங்கிவிட்டன...
எனதான அத்தனையையும்
இருக்கிப் பிடித்தும்
உள்ளிருந்த உறுத்தல்
எட்டி எட்டிப் பார்க்கின்றன..
வரும் போதே
லேசாக முடிக்கிய மூத்திரம்
முனையில் முட்டித் தள்ள
மூச்சு விட்டு விடுவித்தாகி விட்டன
நிமிடங்கள் சிலவும்
நடுக்கத்துடன் நகர்ந்துவிட்டன
வரச்சொன்ன வளப்புணியை
இன்னமும் காணவில்லை...
என்ன செய்வது...?
செய்த தவறை மறைக்க
இப்படியும்
கஸ்டப் படவேண்டிய நிலை..
காற்றில் காணாமல் போனவைகள்
பிசுபிசுத்த சட்டையின் வாடையை
பிறர் சந்தேகம் கொள்ளா வண்ணம்
வியர்த்து வடியும் நெற்றி வியர்வையை
துடைப்பதாக பாசாங்கு செய்து
முகர்ந்து கொண்ட மட்டில்
குமட்டியதை வெளிக்காட்டாமல்
சூம்பிய ஒரு சொத்திக் கையால்
டக்கன்று
டிக்கட்டை கிளித்துத் தந்த
அந்தப் பொடியன்,
பட்ஜட்டின் பெரும் பகுதியை
இராணுவ நலனுக்கென்றே ஒதுக்கிவிட்ட
சமாதான விரும்பிகளான அரசாங்கத்தை,
அப்பெரும் பகுதியையும்
'ஏசீ'க்களின் இறக்குமதிக்கு
ஒதுக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கும்
வெறிபிடித்த வெய்யிலில்,
குடைகளின் கீழ்
பேச்சும் சிரிப்புமாக
பள்ளி கலைந்து செல்லும் மாணவிகள்,
அவனைக் கடக்கையில் உசாராகி
கடந்தபின்
தன்னை ஒரு முறை பார்த்து
விட்ட பெருமூச்சுடன்
அவனது
பலயுகக் கணக்கு ஏக்கங்களும்
யாருமே கண்டு கொள்ளாத ஆசைகளும்
சேர்ந்தே காற்றில் கரைந்தன.
தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்
கூவிக் கொண்டு வரும்
மீன்காரன் வரவில்லை
அங்கு மீன்களே இல்லை
இறைச்சிக் கடையை
எட்டிப் பார்த்தாகிவிட்டது
அங்கோ
எலும்பு கூட மிச்சமில்லை
சந்தையை நிறைத்திருக்கும்
மரக்கறிகள்
என்னைக் கண்டுதான்
நக்கல் கிளம்ப நகைக்கின்றன
மரக்கறி உடலுக்கு நலம் தான்
மனதுக்குத் தான் கொஞ்சமும் ஆகாது
பரவாயில்லை..
வேறு வழியும் இல்லை..
ஏய்..மனமே..!
உன்னைத்தான்..!
உனக்கு இன்று தண்டனை
அனுபவித்தே ஆகவேண்டும்..
எல்லாமே அழகாக இருந்திருக்கும்...
கடலின்
ஓயாத மூக்குச்சீறும் இரைச்சல்,
அதன் தலைக்கு மேலால்
கட்டாக் காலியாக அலையும்
வெள்ளை மலைகள்
மேடையில் 'மைக்' கிடைத்தமட்டில்
அடித்தொண்டையால் கத்தும்
அரசியல் வாயாடிகளாய்
காகங்களின் கரைச்சல்கள்
கடல் செல்ல லாயக்கற்றதாய்
பல மாதம் பேச்சு மூச்சில்லாமல் கிடந்து
எறும்புகளின் ஆளுகைக்கு உட்பட்டுவிட்ட
ஒடிசல் விழுந்த தோணி
எவனோ விட்டுச் சென்ற
டொபியிலிருந்து
சிறு சிறு துகள்களாகச் சுறண்டி
பெரும் மலையையே
மாரிகாலச் சேகரிப்பிற்காக
கொண்டு செல்லும் எறும்புகள்
கூட்டிலிருக்கும் காகத்தை
தந்திரமாக திசை திருப்ப
கூவிக்கூவியே
அதைக் கடுப்பாக்கும் குயில்
தெம்பிலி என்றெண்ணி
தேங்காயை பிய்த்துக் கொண்டு
அதில் ஓட்டை போட அவதிப்படும்
எங்கூர்
குட்டி நட்டிக் காவாலிகள்
தென்னோலைகளுடன் ரகசியம் பேசும்
காற்றின் குசுகுசுப்பு,
அதன் ஓலைகளின் இடுவல் பார்த்து
கசிந்து கொண்டிருக்கும்
கதிரவன் வாயிலிருந்து வடியும் வீணி,
வீணி தன்னில் சிந்திவிடாமல்
தென்னையின் நிழல் மறைவில்
ஒதுங்கி இருக்கும் நான்
இவை எல்லமே
அழகாகவும் ரசிக்கும் படியாகவும்
இருந்திருக்கும்
நாளை
பரீட்சை இல்லை என்றிருந்தால்...
பேக்கயனின் நிறைவேறாத வேண்டும்கள்
விருட்ச வீட்டு நளன்களின்
தலைகோதி இசைமீட்டும் காற்றுடன்
ஆவியாகக் கலக்க வேன்டும்;
வாழ்வை தோழ்மேல் சுமந்து கொண்டு
காலவெளியைக் கடந்து செல்லும்
உழைப்பாளிகளின்
வியர்வையையாவது துவட்டிவிட...
வெண்மேகங்களுடன் மோதி
அதற்குள் அடங்கி ஒடுங்கி
மழைத் துளிகளாக
மண்ணில் விழவேண்டும்;
விவசாயிகளின்
தாகத்தையாவது தணித்துவிட...
இயற்கையுடன் கலந்துரையாடி
பூசாரிகள் பாதிரிகள் பிக்குகள்
மற்றும் மௌலவிகள் - என
அத்தனை பேருக்கும்
லஞ்சம் கொடுத்தாவது
இறைவனாகிவிட வேண்டும்;
செத்தபிறகாவது
பிணங்களுக்கிடையில் பேதம் பார்க்காமல்
புதைக்கச் சொல்லி
வேதம் இறக்கிவிட...
இன்னும் எத்தனையோ வேண்டும்கள்
அத்தனையும்
நிராகரிப்பிற்கென்றே ஜனித்த
அநாதைப் பிச்சைக்காரர்கள்
எதிர்பார்ப்புகள் எல்லாம்
அனுபவங்களின் காய்ந்த சாறாக
நாவில் கசந்து கொண்டுதான் இருக்கின்றன.
எக்கச்சக்கமான கால்கள்
கடலோரம்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
எக்கச்சக்கமான கால்கள்
சில கால்கள்
புதைவதையும் பொருட்படுத்தாது
பயத்தில் தப்பிக்க ஓடுகின்றன
கொழுப்பின்,சீனிகளின்
உருமாறிய விகார முகம் கண்டு...
அவை இரண்டினதும்
மென்மையான முகத்தைக் கூட
கண்டிராத சில கால்கள்
தன் குடும்பத்துக் கால்களின்
உயிர் தேடி
ஒடி வளைந்து வலை வீசுகின்றன...
குஞ்சுக் குஞ்சுக் கால்கள் சில
கடலலைகளுடன்
'முட்டு முட்டு' விளையாட்டில்
'டெச்சாக் காட்டும்' விளையாட்டில்
லயிக்கின்றன...
இன்னும் சில கால்கள்
தங்களின் மேலாண்மையையும்
கொக்கரித்துக் காட்டிக் கொள்ள
உதைபட்ட பந்தையே
கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம்
நான் நீயென போட்டி போட்டுக் கொண்டு
உதைத்துக் கொள்கின்றன...
இன்னும் பல கால்கள்
பலப்பல நோக்கங்களுடன்...
எந்தக் கால்கள் குறித்தும்
அதிகம் அலட்டத் தேவையில்லை
எல்லாக் கால்களின் தடம்களும்
கட்டாயம் காணமல் போய்விடும்...
இருள் உமிழும் விளக்கு
மேசை மின்விளக்கை 'ஓண்' பண்ணிவிட்டு
டயரியைத் திறக்கத் துவங்கியதுதான் தாமதம்
அருகிலிருந்த கடிகார முள்
'வலம் இடமாக' நினைவுச் சொத்தையில்
அறைய ஆரம்பித்து
ஒரு புள்ளியில் இடறிவிழுந்தது.
மறுகணம்
மீண்டும் 'இடம் வலமாக' விளாசத் துவங்கியது...
தொடர்ந்தேர்ச்சையான அறைதல்களின் வலிகள்
கண்ணீராக
பேனையின் வழியே தாழ்களில் விழுந்து காய்ந்தன.
அறைதல் ஓய்ந்த தருணம்
அள்ளி இறைப்பதற்கு மிச்சமின்றி
கண்ணீர் முற்றாக வற்றிவிட்டிருந்தன...
டயரியை மூடிவிட்டு நிமிர்ந்த கணம்
விளக்கு இருளை உமிழத் துவங்கியது
எனக்கோ
எழுதிய பக்கங்களை
கிழித்தெறிவதைத் தவிர
வேறெந்த எண்ணமும் எட்டியும் பார்க்கவில்லை.
முன்முடிவுகளின் விபரீதம்
எதுவும் விளங்கவில்லை
விளங்கிக் கொள்வதற்காக திருகிவிட்ட
மெனக்கடுகள் மொத்தமும் வீணாகின
என்னில் அரங்கேறிய
மொக்குத்தனமான முன்முடிவுகளின்
பாசாங்குதான்
இவை அத்தனைக்கும் பரம காரணம்
ஓரிரு புத்தகங்கள் வாசிப்பு மட்டுமே போதும்
சகல சமாச்சாரங்களையும்
கையகப்படுத்திவிடலாம் என்ற
'நான்'மீதான அதீதம்...
படிப்பிக்காமல் பசப்பிக் கொண்டுதான்
இருக்கிறார்கள் என்ற
மற்றயவர்களின் அபிப்பிராயம்...
வகுப்பறையை நேற்றுவரை
எட்டியும் பார்க்காத நான்
அங்கு போய்வந்தவர்களிடம்
நிகழ்த்திய விசாரிப்புக்கு
அவனுகளின் போதாமை பிரதிபலிக்கும்
விரக்தியான பதில்கள்...
இது போன்ற
என்னில் அரங்கேறிவிட்ட
முன்முடிவுகளின் மொக்குத்தனம் தான்
இன்றைய வகுப்பில்
எனதான முயற்சிகள் வீணடிப்பிற்கு
முழுப் பொறுப்பு.









