By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

எல்லாமே அழகாக இருந்திருக்கும்...

கடலின்
ஓயாத மூக்குச்சீறும் இரைச்சல்,
அதன் தலைக்கு மேலால்
கட்டாக் காலியாக அலையும்
வெள்ளை மலைகள்


மேடையில் 'மைக்' கிடைத்தமட்டில்
அடித்தொண்டையால் கத்தும்
அரசியல் வாயாடிகளாய்
காகங்களின் கரைச்சல்கள்


கடல் செல்ல லாயக்கற்றதாய்
பல மாதம் பேச்சு மூச்சில்லாமல் கிடந்து
எறும்புகளின் ஆளுகைக்கு உட்பட்டுவிட்ட
ஒடிசல் விழுந்த தோணி


எவனோ விட்டுச் சென்ற 
டொபியிலிருந்து
சிறு சிறு துகள்களாகச் சுறண்டி
பெரும் மலையையே 
மாரிகாலச் சேகரிப்பிற்காக
கொண்டு செல்லும் எறும்புகள்


கூட்டிலிருக்கும் காகத்தை 
தந்திரமாக திசை திருப்ப
கூவிக்கூவியே
அதைக் கடுப்பாக்கும் குயில்


தெம்பிலி என்றெண்ணி
தேங்காயை பிய்த்துக் கொண்டு
அதில் ஓட்டை போட அவதிப்படும்
எங்கூர்
குட்டி நட்டிக் காவாலிகள்


தென்னோலைகளுடன் ரகசியம் பேசும்
காற்றின் குசுகுசுப்பு,
அதன் ஓலைகளின் இடுவல் பார்த்து
கசிந்து கொண்டிருக்கும்
கதிரவன் வாயிலிருந்து வடியும் வீணி,
வீணி தன்னில் சிந்திவிடாமல்
தென்னையின் நிழல் மறைவில்
ஒதுங்கி இருக்கும் நான்


இவை எல்லமே
அழகாகவும் ரசிக்கும் படியாகவும் 
இருந்திருக்கும்
நாளை 
பரீட்சை இல்லை என்றிருந்தால்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment