வீதியோரப் புழுதிக்குள்
சொறி நாய்களுடன் சொறியர்களாய்
சுறுண்டு கிடக்கும்
அந்த ஜீவன்களைப் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
அறுநூறிலிருந்து
இருநூறிற்கு இறங்கி வந்து
வருமாறு கெஞ்சிய
அவள் மனவெதனம் அறியாது
வேசையென்று விரட்டியடித்த
என் நண்பன்,
விரக்தியுடன் விட்டகண்ற
அந்தப் பெண்
இருவரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
திருமணச் சந்தையில்
தம் மகன்களின் குறியை
ஆர்வத்தோடு ஏலம் போடும்
பெற்றோரகள்,
தம் மகள்களின் வாய்க்குள்
கிராக்கியான ஏலத்தைத்தான்
திணிக்க வேண்டும்-என்ற
இலட்சியத் தாகத்தோடு
போட்டி போடும் பெற்றோரகள்,
இவர்களையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
ஆசை தீரப் புணர்வதற்கும்
பிள்ளை குட்டிகளை
பேண்டு தள்ளுவதற்கும்
வெடுக்கெடுக்கும் உள்ளாடைகளை
களுவிக் காயப் போடவும்
குசினிக்குள் புளுங்குவதற்கும் தான்
மனைவி என்றெண்ணும்
கணவர்களையும்
மனம் கல்லாய்ப் போன
கணவனின் காலை
காலமெல்லாம்
கண்ணீரால் கழுவிக் கொண்டு
அவன் காலுக்கடியிலேயே
மிதி பட்டுக் கசங்கும்
மனைவி மண்ணாங் கட்டிகளையும்
பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
மக்களால் மக்களுக்காக என்று
ஜனநோயகம் பரப்பி
மக்களை மாக்களாக்கும்
அரசியல் வாயாடிகள்,
கறிவேப்பிலையாய்த் தான்
வறுக்கப் படுகிறோம் என்று
தெரிந்தே கருகும் தொண்டர்கள்,
பேயப்படுவது
மூத்திரம் தான் என்று
தெரிந்தே ஆவண்டு பிடிக்கும்
வாக்காளர்கள்,
என்று எல்லோரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
கோவிலில் இருந்து பள்ளிவாசலுக்கும்
பள்ளிவாசலில் இருந்து பன்சலைக்கும்
பன்சலையில் இருந்து கோவிலுக்கும்
கோவிலில் இருந்து சர்ச்சுகளுக்கும்..
மீண்டும் மீழ்சுழற்ச்சி
எதிர்ச் சுழற்ச்சி, குறுக்குச் சுழற்ச்சி
என்றவாறாக
ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கும்
ஏனையவற்றிற்கும்-போதாக்குறைக்கு
ஒரு பள்ளிவாசலில் இருந்து பக்கத்து பள்ளிக்கும்
ஒரு கோவிலில் இருந்து அடுத்த கோவிலிற்கு
துப்பாக்கித் தோட்டாக்களையும்
வெடிகுண்டுகளையும்
காணிக்கைகளாக செலுத்திக் கொண்டிருக்கும்
மத வெறியர்கள்,
அவர்கள் வெறியாட்டங்களுக்குள்
சிக்கிச் சப்பழிஞ்சி போகும்
சாதரணங்கள்,
சகலரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
உடலில் உயிர் ஒட்டியிருப்பதால்
மாத்திரமே
வாழ்ந்து கொண்டிருக்கும்
நானும்
என்போன்ற பலரையும்
பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
இதுவும் மாறிவிடும்
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment