கடலோரம்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
எக்கச்சக்கமான கால்கள்
சில கால்கள்
புதைவதையும் பொருட்படுத்தாது
பயத்தில் தப்பிக்க ஓடுகின்றன
கொழுப்பின்,சீனிகளின்
உருமாறிய விகார முகம் கண்டு...
அவை இரண்டினதும்
மென்மையான முகத்தைக் கூட
கண்டிராத சில கால்கள்
தன் குடும்பத்துக் கால்களின்
உயிர் தேடி
ஒடி வளைந்து வலை வீசுகின்றன...
குஞ்சுக் குஞ்சுக் கால்கள் சில
கடலலைகளுடன்
'முட்டு முட்டு' விளையாட்டில்
'டெச்சாக் காட்டும்' விளையாட்டில்
லயிக்கின்றன...
இன்னும் சில கால்கள்
தங்களின் மேலாண்மையையும்
கொக்கரித்துக் காட்டிக் கொள்ள
உதைபட்ட பந்தையே
கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம்
நான் நீயென போட்டி போட்டுக் கொண்டு
உதைத்துக் கொள்கின்றன...
இன்னும் பல கால்கள்
பலப்பல நோக்கங்களுடன்...
எந்தக் கால்கள் குறித்தும்
அதிகம் அலட்டத் தேவையில்லை
எல்லாக் கால்களின் தடம்களும்
கட்டாயம் காணமல் போய்விடும்...
எக்கச்சக்கமான கால்கள்
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment