ஸ்.ராமகிறுஷ்ணனின் எழுத்துகளுக்கு நான் எப்பொழுதும் அடம் பிடிக்கும் குழந்தை தான்.பொம்மை கேட்டு அடம் பிடிப்பது போல் அவர் எழுத்துக்களை ஸ்பரிசித்துப் பார்த்துவிட காலத்திடம் கெஞ்சி வற்புறுத்தி வேண்டுகோள்களால் பரிதாபப்பட வைத்துவிடுவேன். மனமிரங்கிய காலமும் எனக்குரிய அத்தனை வேலைகளையும் இடையில் புகுந்து விடாமல் ஒரு மூலையைப் பார்த்து ஒதுக்கித் தள்ளிவைத்து விடும்.
இலக்கிய ஆர்வமும் , ராமகிறுஷ்ணனின் எழுத்துக்கள் மீதான ஆர்வமும் நண்பன் பூவனிடமிருந்து ஒட்டுண்ணியைப் போல் என்னில் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு எனதான மற்றைய பல விடயத்துவங்களையும் ஏனையவற்றின் மீதான ஈடுபாடு, கரிசனை, கால நேரம் என்று அத்தனையையும் உறிஞ்சி இன்றைய என் நினைவுகளை ஆக்கிரமித்து நிற்கின்றன.
ஆடு,மாடு மேய்ப்பதென்றாலும் அரசாங்கத்தின் மாடுகளைத்தான் மேய்த்தாக வேண்டும் என்ற கண்டிப்பான எதிர்பார்ப்புகளால் நிர்மாணிக்கப்பட்ட சமூக அமைப்பில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் , எனதான இலக்கிய ஆர்வத்துடன் அடிக்கடி சண்டை போட்டு மனப்பரப்பில் வெறுமை நிலையை உருவாக்கி விரக்த்தி வெளியில் கைவிட்டு விடுகின்றன.பன்றிகளைப் பராமரிக்கும் வேலை என்றாலும் பரவாயில்லை அரசாங்க வேலை ஏதும் காலியாக இருந்தால் தயை கூர்ந்து அறிவித்து விடுங்கள்...
நேற்றிரவும் அப்படித்தான... ஆழ்கடல் இறங்கி மிகுந்த அவதானத்தோடு சுழியோடும் மனோ நிலையில் ஸ்.ராமகிறுஷ்ணனின் எழுத்துகளுக்கும் அவைகள் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியல்களுக்குமிடையே மூழ்கி அலைந்து கொண்டிருந்தேன்...
இப்பொழுதெல்லாம் எதைப் பற்றி வாசித்தாலும் வாசிப்பு நிகழும் பொழுதே வாசிக்கப் படும் அத்தனையும் ஒன்றுவிடாமல் காட்சிப் படிமங்களாக மனதில் அசைந்து அலைகின்றன.விபரிக்கப்படும் இடங்கள், சம்பவங்கள், உணர்வுகள் என்று எல்லாவற்றையும் இயற்கையான ஈரலிப்புடன் ஸ்பரிசித்துப் பார்க்கின்றன.அப்படித்தான் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தேன்..
ஆழ்ந்த தியானத்தில் நிசப்த வெளிகளின் மீது பயணித்துக் கொண்டிருப்பவனை உசுப்பிப் பார்க்கும் விதத்திலான ஒரு குரல் திடுமெனத் தாக்கி அமைதியைக் குலைத்து புத்தகத்தை விட்டும் கண்களைத் திருப்பிவிட்டன.
"புத்தகத்துக்குள்ள அப்படி என்னத்த மறச்சி வச்சிக்கி கடுமையா பாத்துக்கிருக்கயள்?"
என் சிந்தனை நரம்பின் தொடர்ச்சியை தறித்து வலியை ஏற்படுத்திய குரலுக்கு உரிமையாளன், எங்கள் முன் வீட்டில் குடியிருப்பவன்.36km தூரம் தள்ளி இருக்கும் ஊரான 'காத்தான் குடியைச்' சேர்ந்தவன்.எங்கட ஊரில் உள்ள ஒரு உடுப்புக் கடையில் வேலை பார்க்கும் பொடியன்.இரவு எட்டரை மணி தாண்ட நேராக வீட்டுக்குத்தான் வருவான்.பேச ஆள் கிடைக்காவிட்டால் என்னுடன் தான் எதையாவது பேசிக்கொண்டு கரைச்சல் படுத்துவான்.சிலநாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது அவன் ஒரு "பொடியன் மாஸ்டர்" என்று .அவனுடன் சகஜமாக சிரித்துப் பேசும் என் தம்பியையும் எனி ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையையும் உருவக்கிவிட்டான் அந்த வளப்புனி.இரவு 9.00மணியளவில் எங்கள் ரோட்டின் தொங்கலில் அமைந்துள்ள கொத்துக் கடைக்குச் சாப்பிடச் சென்றுவிடுவான்.அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பிறருக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்வதை பல முறை கண்டு வியந்திருக்கிறேன்.
தியானம் குலைந்து போன கடுப்பில் "என்னத்த வச்சிக்கிட்டு பாக்கோணும் எண்டு எதிர்பாக்கயள்?" என்று கொஞ்சம் தடிப்பாகவே கேட்டுவிட்டேன்.
"ஒங்களை எல்லாம் லேசில நம்பேலா.."
"நீங்க நம்போணும் என்ற எந்த அவசியமும் எனக்கில்ல"..சற்று மிதப்போடுதான்
என்னிடமிருந்து இந்த பதில் கறாராக வெளிப்பட்டது.
அவன் எதை நினைத்துக் கேட்டிருப்பான் என்று உங்களால் ஊகிக்க முடிகின்றதா..? வேறொன்றுமில்லை பரந்த மனது படைத்த நமீதா மற்றும் லக்ஷ்மிராய் போன்ற உடல் தானப் பிரியைகளின் கொடைகளை நடுப்பக்கத்தில் போட்டு விற்பனையையும், நாக்கு வெளியில் தொங்கும் சிறந்த வாசகர்களையும் சூடு பிடிக்கவைக்கும் நாட்டுக்குகந்த பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றை மடித்து வைத்துக் கொண்டு கர மைத்துணம் செய்ய ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கிறேன் என்ற வெளிக்குத்துதான் அவன் வினவியதன் முழு மொத்த எதிர்பார்ப்பு...
என்னுடைய அந்த பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காதவன் , எங்கிருந்தோ வலிந்து இழுத்து எடுத்த நமட்டுச் சிரிப்பொண்றை உதட்டில் அப்பிக் காட்டிவிட்டு கிளம்பிவிட்டான்.
என் பதில் நிச்சயம் அவனை சங்கடப்படுத்தி இருக்கவேண்டும்.என் எதிர்பார்ப்பும் அதுதான்.நான் ஒன்றும் இயேசுவோ மகாத்மாவோ அல்ல; பழிவாங்குவதில் 'நான் மகான் அல்ல' கார்த்திக்கைவிட மோசமானவன்.இந்த மனோநிலையை மாற்றிக் கொளும் படி 'மனசாட்சி' இன்றுவரை 'நான்' என்ற அதீதத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டுதான் கிடக்கின்றது...
அவன் சென்ற பிறகும் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.சொற்ப நொடிக்குள் நிகழ்ந்துவிட்ட அவனுடனான உரையாடல் தான் என் நினைவுப் பாறைகளில் கலடலைகளாக மோதிக்கொண்டன.
"ஒங்கள எல்லாம் லேசில நம்பேலா" இந்த வார்த்தைகள் குறித்தும் அதற்கான என் பதில் குறித்துமே நினைவலைகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
இதுபோன்ற ஏதாவது தொந்தரவான உரையாடல் நிகழ்ந்துவிட்டால் தான் மனம் கார்ல் மாக்ஸ் மாதிரி ஆய்வு செய்யத் துவங்கிவிடும்.
நம் வாழ்க்கையின் எதார்த்தத்தை அலசிப் பார்த்தால்... நம்மில் பலரும் மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்காகத்தான் போலியாக இயங்கிக் கொன்டிருக்கிறார்கள்.தங்களைச் சுற்றிலும் பொதுப் புத்தியின் வழியிலான புனிதத்தை வலிந்து கட்டமைத்துக் கொண்டும் அதனைக் கஸ்டப்பட்டுக் காப்பாற்றி தக்கவைத்துக் கொண்டும் , பிறரிடம் தன்னைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தைக் காட்சிப்படுத்தி நம்பவைப்பதற்காகவமுமே இயன்றமட்டும் பாடுபடுகிறார்கள்.
இந்த மனோநிலையில் உள்ளவனின் குரல் தான் "ஒங்கள எல்லாம் லேசில நம்பேலா" (இப்ப இவன நம்பச் சொல்லி யார் அழுதா?) அவன் என்னைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தை நம்பவைக்குமாறு சாடையாச் சொல்கிறான். நானோ இருளின் சினேகிதன்.இருளின் நண்பன் என்பதற்காக ஓளியின் எதிரியாகத்தான் இருக்க வேண்டும் என்று 'டுவலிசப்' போக்கில் என்னைக் கட்டமைத்துவிட வேண்டாம்.
அவனுடைய வினாவிற்கு எந்த ஒரு முன் யோசனையுமின்றி என்னிடமிருந்து வெளிப்பட்ட பதில் " நிங்க நம்போணும் என்ற எந்த அவசியமும் எனக்கில்ல".
உண்மையில் இது ஒரு வகை சுதந்திரத்தை சுட்டி நிற்கும் வாசகம்.எந்த ஒரு நிர்ப்பந்தத்திற்கும் அவசியப்பாட்டிற்கும் கைதாகி சிறைப்பட விரும்பாத மனோநிலையின் வெளிப்பாடு. எதார்த்தத்தில் இது தான் நான்.
நம்முடைய இயல்பான எதார்த்த நிலை இத்தகைய சடுதியான நிகழ்வுகளின் போதுதான் அப்பட்டமாக வெளிப்படுகிறது.இது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் தான் நம்மைப் பற்றி நமக்கே புரியவைத்து விடுகின்றன.
அந்தத் தருணத்தில் 'இது தான் நான் என' புரிந்து கொள்ள உதவி செய்த அவனுக்கு கட்டாயம் நன்றி சொல்லிவிட உறுதி செய்து கொண்டேன். இருந்தாலும் சிறிது தயக்கம்;நன்றி தெரிவித்தபின் 'ராத்திரி ரூமுக்கு வாங்களேன்' என்று அவன் கூப்பிடமால் இருந்தால் சரி.
தன்னிலை குறித்த புரிதல்
தேவையான தாக்குதல்தான்
வாழ்க்கைப் பாதை எங்கிலும்
பழக்கப்பட்டதும் அன்னியதுமான
துன்பங்கள் பல
பதுங்கிக் கிடக்கின்றன.
ஒவ்வொண்றும்
கணக்காய்க் காத்துக் கிடந்து
திடுமெனத் தாக்கிவிடுகின்றன
கொரில்லா வாக்கில்...
தாக்குதல்களில் அதிகமானவை
முன்கூட்டியே
தவிர்க்க முடியாதவைகள் தான்..
தேவைப் படுவதெல்லாம்
தாங்கிக் கொள்ளும் தைரியம் தான்..
ஒரு விததில்
இத்தகைய தாக்குதல்கள்
ஓளிக்குத் தேவையான இருள் போல்
அவசியமானதும் தான்..
'இருளை மறுதலித்து
ஓளியை அனுபவித்து விடலாமா என்ன..!..?
கொணக்கர்கள்...
கொணக்குப் பிடித்த ஒருவனின்
களிசறத்தனம்
தெருவில் கிடந்த
கொங்கிறீட் கல்லிலும்
சற்றுத்தள்ளி
மலம் கழித்துக் கொண்டிருந்த
தெரு நாயிலும்
தாண்டவமாடி விட்டது...
தெறித்து விழுந்த
நாயும் கல்லும்
ரத்த விலிகளுடன்
வெடுக்கெனப் பிரிந்தன..
வைத்த குறி தப்பாதது கண்ட
கொணக்கன்
சாதனை செய்த பெருமிதத்தோடு
கிளம்பி விட்டான்..
வலிந்து ரத்தம் பூசப்பட்ட
கொங்கிறீட் கல்லும்
பூசுவதற்கு ரத்தம் கொடுத்துவிட
நிர்ப்பந்திக்கப்பட்ட
தெரு நாயும்
இரு நாள் கடந்த சந்திப்பில்
பேசிக் கொண்டன..
"சில மனிச ஜென்மங்கள்
தங்களோட மசிரைப் புடுங்குவதும் இல்லை
மத்தவங்கட மசிரை விட்டு வைப்பதும் இல்லை"
லொள்...லொள்.....
இதுவும் மாறிவிடும்
வீதியோரப் புழுதிக்குள்
சொறி நாய்களுடன் சொறியர்களாய்
சுறுண்டு கிடக்கும்
அந்த ஜீவன்களைப் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
அறுநூறிலிருந்து
இருநூறிற்கு இறங்கி வந்து
வருமாறு கெஞ்சிய
அவள் மனவெதனம் அறியாது
வேசையென்று விரட்டியடித்த
என் நண்பன்,
விரக்தியுடன் விட்டகண்ற
அந்தப் பெண்
இருவரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
திருமணச் சந்தையில்
தம் மகன்களின் குறியை
ஆர்வத்தோடு ஏலம் போடும்
பெற்றோரகள்,
தம் மகள்களின் வாய்க்குள்
கிராக்கியான ஏலத்தைத்தான்
திணிக்க வேண்டும்-என்ற
இலட்சியத் தாகத்தோடு
போட்டி போடும் பெற்றோரகள்,
இவர்களையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
ஆசை தீரப் புணர்வதற்கும்
பிள்ளை குட்டிகளை
பேண்டு தள்ளுவதற்கும்
வெடுக்கெடுக்கும் உள்ளாடைகளை
களுவிக் காயப் போடவும்
குசினிக்குள் புளுங்குவதற்கும் தான்
மனைவி என்றெண்ணும்
கணவர்களையும்
மனம் கல்லாய்ப் போன
கணவனின் காலை
காலமெல்லாம்
கண்ணீரால் கழுவிக் கொண்டு
அவன் காலுக்கடியிலேயே
மிதி பட்டுக் கசங்கும்
மனைவி மண்ணாங் கட்டிகளையும்
பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
மக்களால் மக்களுக்காக என்று
ஜனநோயகம் பரப்பி
மக்களை மாக்களாக்கும்
அரசியல் வாயாடிகள்,
கறிவேப்பிலையாய்த் தான்
வறுக்கப் படுகிறோம் என்று
தெரிந்தே கருகும் தொண்டர்கள்,
பேயப்படுவது
மூத்திரம் தான் என்று
தெரிந்தே ஆவண்டு பிடிக்கும்
வாக்காளர்கள்,
என்று எல்லோரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
கோவிலில் இருந்து பள்ளிவாசலுக்கும்
பள்ளிவாசலில் இருந்து பன்சலைக்கும்
பன்சலையில் இருந்து கோவிலுக்கும்
கோவிலில் இருந்து சர்ச்சுகளுக்கும்..
மீண்டும் மீழ்சுழற்ச்சி
எதிர்ச் சுழற்ச்சி, குறுக்குச் சுழற்ச்சி
என்றவாறாக
ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கும்
ஏனையவற்றிற்கும்-போதாக்குறைக்கு
ஒரு பள்ளிவாசலில் இருந்து பக்கத்து பள்ளிக்கும்
ஒரு கோவிலில் இருந்து அடுத்த கோவிலிற்கு
துப்பாக்கித் தோட்டாக்களையும்
வெடிகுண்டுகளையும்
காணிக்கைகளாக செலுத்திக் கொண்டிருக்கும்
மத வெறியர்கள்,
அவர்கள் வெறியாட்டங்களுக்குள்
சிக்கிச் சப்பழிஞ்சி போகும்
சாதரணங்கள்,
சகலரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
உடலில் உயிர் ஒட்டியிருப்பதால்
மாத்திரமே
வாழ்ந்து கொண்டிருக்கும்
நானும்
என்போன்ற பலரையும்
பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
* * * *
மறத்தல் பற்றிய நினைவு
தினமும் நினைக்கிறேன்
அந்த அதனை மறந்துவிட..
அந்த அதுவும் நினைக்கிறது
மறக்காமல் நினைவு படுத்திவிட..
மறத்தலுக்காய் நினைத்ததால்
நினைத்தலில் நனைந்த மறதி
ஈர ஆடை களைய
மறக்க நினைத்த அத்தனையும்
மொத்தமாய் முகம் காட்டுகின்றன..
எனதான
முயற்சிகள் மொத்தமும்
நொடிக்கு நொடி தோல்வியே..!
என் சமாதி மேலாவது
எழுதிவிடுங்கள்
"அவை எதனையும்
இவன் மறந்துவிட்டான்" என்று..!
அணைக்காமல் விட்ட மின்குமிழால்...
யார் உள்ளே..?
எத்தனை முறைதான் கேட்பது
உள்ளே யார்..?
காத்திருந்ததில்,கத்தியதில்
கால் கடுக்க
தொண்டை வலிக்க
மனம் கடுப்பாகி விட்டது.
யார் என்றாலும் பரவாயில்லை
உடன் வெளிக்கு வரவேண்டும்.
இதற்கு மேல்
கொஞ்சமும் அடக்க முடியாது;
ஆத்திரத்தை அல்ல
முட்டி நிற்கும் மூத்திரத்தை...
உள்ளே இருப்பவர்
என்னுடன் பேசமாட்டாரா..?
ஏன் பதில் எதுவும்
சொல்லவில்லை..?
ஒரு வேளை
உள்ளே யாருமே இல்லையா..?
யாரும் இல்லை என்று
எவரும் சொல்லவில்லையே...
எவரும் சொல்லாத்தால்
யாரும் இல்லையோ...
பின் எதற்காக
எரியும் மின்குமிழ்
இருப்பதாய் சுட்டுகிறது..?..!
தனி உலகில் தனிக்கற ராஜாவாம்
அவன் இயலாமையின் மீது சமூகத்து எதிர்பார்ப்புகள் உமிழ்ந்து கொண்டிருக்கும் எச்சில்களை கொஞ்ச மாச்சிலும் வழித்து உதறிவிட அவனை ஆட்டிப் படைக்கும் பொல்லாப் போன சுயம் இம்மியளவும் இடம் தருவதாய் இல்லை.
அவனைப் பொறுத்த வரைக்கும் அவன் ஒரு தனி உலகாம் அவன் சுயம் அவ்வுலகத்து தனிக்கற ராஜாவாம் ராஜாவின் விருப்பங்கள் தான் அவ்வுலகின் நிகழ்வுகளாம்...
பிறகு எப்படித் தான் வேற்றுக் கிரக வாசிகளின் எதிர்பார்ப்புகள் அவன் உலகில் வாழ்வியல் முறைவழியாக முடியும்..?
அவன் நிலைப்பாடு தான் அது என்றான பிறகு எந்த சமூகமும் காரி உமிழ்ந்தென்ன..? முக்கி மூத்திரமே பேய்ந்தென்ன..? அவன் சுயம் தான் அவை எதையுமே உணர விரும்ப வில்லையே...
பயத்தினால் பயத்தில் பயத்துடன்
நடிச்சாம்
இறுகிய இருட்டில்
கடற்கரையை அடுத்துள்ள
குப்பைகள் கலைந்த ரோட்டில்
நான் மட்டும் தட்டத்தனியாக...
காற்றுடன் சண்டை போடும்
கடலலைகளது பின்னணி இசையில்
மையவாடியிலிருந்த நாய்களின்
கௌசிப் பேய்ச் சத்தங்கள்...
போதாக் குறைக்கு
காதைக் கனகாட்டுப் படுத்தும்
சில்லூரிகளின் சுல்சுலுப்பு...
வந்தடைந்து
ஓரிரு நொடி நகர்ந்திடாத போதும்
ஓட்டின் இடுவல் பார்த்துப் புகுந்து
சுவர்வழி கசிந்தொழுகும் மழை நீராய்
என்னுள் நுளைந்த பயம்
கண் கை கால் வாய் வழியாக
கசியத் தொடங்கிவிட்டன...
எனதான அத்தனையையும்
இருக்கிப் பிடித்தும்
உள்ளிருந்த உறுத்தல்
எட்டி எட்டிப் பார்க்கின்றன..
வரும் போதே
லேசாக முடிக்கிய மூத்திரம்
முனையில் முட்டித் தள்ள
மூச்சு விட்டு விடுவித்தாகி விட்டன
நிமிடங்கள் சிலவும்
நடுக்கத்துடன் நகர்ந்துவிட்டன
வரச்சொன்ன வளப்புணியை
இன்னமும் காணவில்லை...
என்ன செய்வது...?
செய்த தவறை மறைக்க
இப்படியும்
கஸ்டப் படவேண்டிய நிலை..
காற்றில் காணாமல் போனவைகள்
பிசுபிசுத்த சட்டையின் வாடையை
பிறர் சந்தேகம் கொள்ளா வண்ணம்
வியர்த்து வடியும் நெற்றி வியர்வையை
துடைப்பதாக பாசாங்கு செய்து
முகர்ந்து கொண்ட மட்டில்
குமட்டியதை வெளிக்காட்டாமல்
சூம்பிய ஒரு சொத்திக் கையால்
டக்கன்று
டிக்கட்டை கிளித்துத் தந்த
அந்தப் பொடியன்,
பட்ஜட்டின் பெரும் பகுதியை
இராணுவ நலனுக்கென்றே ஒதுக்கிவிட்ட
சமாதான விரும்பிகளான அரசாங்கத்தை,
அப்பெரும் பகுதியையும்
'ஏசீ'க்களின் இறக்குமதிக்கு
ஒதுக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கும்
வெறிபிடித்த வெய்யிலில்,
குடைகளின் கீழ்
பேச்சும் சிரிப்புமாக
பள்ளி கலைந்து செல்லும் மாணவிகள்,
அவனைக் கடக்கையில் உசாராகி
கடந்தபின்
தன்னை ஒரு முறை பார்த்து
விட்ட பெருமூச்சுடன்
அவனது
பலயுகக் கணக்கு ஏக்கங்களும்
யாருமே கண்டு கொள்ளாத ஆசைகளும்
சேர்ந்தே காற்றில் கரைந்தன.
தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்
கூவிக் கொண்டு வரும்
மீன்காரன் வரவில்லை
அங்கு மீன்களே இல்லை
இறைச்சிக் கடையை
எட்டிப் பார்த்தாகிவிட்டது
அங்கோ
எலும்பு கூட மிச்சமில்லை
சந்தையை நிறைத்திருக்கும்
மரக்கறிகள்
என்னைக் கண்டுதான்
நக்கல் கிளம்ப நகைக்கின்றன
மரக்கறி உடலுக்கு நலம் தான்
மனதுக்குத் தான் கொஞ்சமும் ஆகாது
பரவாயில்லை..
வேறு வழியும் இல்லை..
ஏய்..மனமே..!
உன்னைத்தான்..!
உனக்கு இன்று தண்டனை
அனுபவித்தே ஆகவேண்டும்..
எல்லாமே அழகாக இருந்திருக்கும்...
கடலின்
ஓயாத மூக்குச்சீறும் இரைச்சல்,
அதன் தலைக்கு மேலால்
கட்டாக் காலியாக அலையும்
வெள்ளை மலைகள்
மேடையில் 'மைக்' கிடைத்தமட்டில்
அடித்தொண்டையால் கத்தும்
அரசியல் வாயாடிகளாய்
காகங்களின் கரைச்சல்கள்
கடல் செல்ல லாயக்கற்றதாய்
பல மாதம் பேச்சு மூச்சில்லாமல் கிடந்து
எறும்புகளின் ஆளுகைக்கு உட்பட்டுவிட்ட
ஒடிசல் விழுந்த தோணி
எவனோ விட்டுச் சென்ற
டொபியிலிருந்து
சிறு சிறு துகள்களாகச் சுறண்டி
பெரும் மலையையே
மாரிகாலச் சேகரிப்பிற்காக
கொண்டு செல்லும் எறும்புகள்
கூட்டிலிருக்கும் காகத்தை
தந்திரமாக திசை திருப்ப
கூவிக்கூவியே
அதைக் கடுப்பாக்கும் குயில்
தெம்பிலி என்றெண்ணி
தேங்காயை பிய்த்துக் கொண்டு
அதில் ஓட்டை போட அவதிப்படும்
எங்கூர்
குட்டி நட்டிக் காவாலிகள்
தென்னோலைகளுடன் ரகசியம் பேசும்
காற்றின் குசுகுசுப்பு,
அதன் ஓலைகளின் இடுவல் பார்த்து
கசிந்து கொண்டிருக்கும்
கதிரவன் வாயிலிருந்து வடியும் வீணி,
வீணி தன்னில் சிந்திவிடாமல்
தென்னையின் நிழல் மறைவில்
ஒதுங்கி இருக்கும் நான்
இவை எல்லமே
அழகாகவும் ரசிக்கும் படியாகவும்
இருந்திருக்கும்
நாளை
பரீட்சை இல்லை என்றிருந்தால்...
பேக்கயனின் நிறைவேறாத வேண்டும்கள்
விருட்ச வீட்டு நளன்களின்
தலைகோதி இசைமீட்டும் காற்றுடன்
ஆவியாகக் கலக்க வேன்டும்;
வாழ்வை தோழ்மேல் சுமந்து கொண்டு
காலவெளியைக் கடந்து செல்லும்
உழைப்பாளிகளின்
வியர்வையையாவது துவட்டிவிட...
வெண்மேகங்களுடன் மோதி
அதற்குள் அடங்கி ஒடுங்கி
மழைத் துளிகளாக
மண்ணில் விழவேண்டும்;
விவசாயிகளின்
தாகத்தையாவது தணித்துவிட...
இயற்கையுடன் கலந்துரையாடி
பூசாரிகள் பாதிரிகள் பிக்குகள்
மற்றும் மௌலவிகள் - என
அத்தனை பேருக்கும்
லஞ்சம் கொடுத்தாவது
இறைவனாகிவிட வேண்டும்;
செத்தபிறகாவது
பிணங்களுக்கிடையில் பேதம் பார்க்காமல்
புதைக்கச் சொல்லி
வேதம் இறக்கிவிட...
இன்னும் எத்தனையோ வேண்டும்கள்
அத்தனையும்
நிராகரிப்பிற்கென்றே ஜனித்த
அநாதைப் பிச்சைக்காரர்கள்
எதிர்பார்ப்புகள் எல்லாம்
அனுபவங்களின் காய்ந்த சாறாக
நாவில் கசந்து கொண்டுதான் இருக்கின்றன.
எக்கச்சக்கமான கால்கள்
கடலோரம்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
எக்கச்சக்கமான கால்கள்
சில கால்கள்
புதைவதையும் பொருட்படுத்தாது
பயத்தில் தப்பிக்க ஓடுகின்றன
கொழுப்பின்,சீனிகளின்
உருமாறிய விகார முகம் கண்டு...
அவை இரண்டினதும்
மென்மையான முகத்தைக் கூட
கண்டிராத சில கால்கள்
தன் குடும்பத்துக் கால்களின்
உயிர் தேடி
ஒடி வளைந்து வலை வீசுகின்றன...
குஞ்சுக் குஞ்சுக் கால்கள் சில
கடலலைகளுடன்
'முட்டு முட்டு' விளையாட்டில்
'டெச்சாக் காட்டும்' விளையாட்டில்
லயிக்கின்றன...
இன்னும் சில கால்கள்
தங்களின் மேலாண்மையையும்
கொக்கரித்துக் காட்டிக் கொள்ள
உதைபட்ட பந்தையே
கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம்
நான் நீயென போட்டி போட்டுக் கொண்டு
உதைத்துக் கொள்கின்றன...
இன்னும் பல கால்கள்
பலப்பல நோக்கங்களுடன்...
எந்தக் கால்கள் குறித்தும்
அதிகம் அலட்டத் தேவையில்லை
எல்லாக் கால்களின் தடம்களும்
கட்டாயம் காணமல் போய்விடும்...
ஒற்றையடிக் குளத்துப் பாதை
ஒற்றையடி இருட்டுப் பாதையில்
இருள் உமிழும் விளக்கு
மேசை மின்விளக்கை 'ஓண்' பண்ணிவிட்டு
டயரியைத் திறக்கத் துவங்கியதுதான் தாமதம்
அருகிலிருந்த கடிகார முள்
'வலம் இடமாக' நினைவுச் சொத்தையில்
அறைய ஆரம்பித்து
ஒரு புள்ளியில் இடறிவிழுந்தது.
மறுகணம்
மீண்டும் 'இடம் வலமாக' விளாசத் துவங்கியது...
தொடர்ந்தேர்ச்சையான அறைதல்களின் வலிகள்
கண்ணீராக
பேனையின் வழியே தாழ்களில் விழுந்து காய்ந்தன.
அறைதல் ஓய்ந்த தருணம்
அள்ளி இறைப்பதற்கு மிச்சமின்றி
கண்ணீர் முற்றாக வற்றிவிட்டிருந்தன...
டயரியை மூடிவிட்டு நிமிர்ந்த கணம்
விளக்கு இருளை உமிழத் துவங்கியது
எனக்கோ
எழுதிய பக்கங்களை
கிழித்தெறிவதைத் தவிர
வேறெந்த எண்ணமும் எட்டியும் பார்க்கவில்லை.
முன்முடிவுகளின் விபரீதம்
எதுவும் விளங்கவில்லை
விளங்கிக் கொள்வதற்காக திருகிவிட்ட
மெனக்கடுகள் மொத்தமும் வீணாகின
என்னில் அரங்கேறிய
மொக்குத்தனமான முன்முடிவுகளின்
பாசாங்குதான்
இவை அத்தனைக்கும் பரம காரணம்
ஓரிரு புத்தகங்கள் வாசிப்பு மட்டுமே போதும்
சகல சமாச்சாரங்களையும்
கையகப்படுத்திவிடலாம் என்ற
'நான்'மீதான அதீதம்...
படிப்பிக்காமல் பசப்பிக் கொண்டுதான்
இருக்கிறார்கள் என்ற
மற்றயவர்களின் அபிப்பிராயம்...
வகுப்பறையை நேற்றுவரை
எட்டியும் பார்க்காத நான்
அங்கு போய்வந்தவர்களிடம்
நிகழ்த்திய விசாரிப்புக்கு
அவனுகளின் போதாமை பிரதிபலிக்கும்
விரக்தியான பதில்கள்...
இது போன்ற
என்னில் அரங்கேறிவிட்ட
முன்முடிவுகளின் மொக்குத்தனம் தான்
இன்றைய வகுப்பில்
எனதான முயற்சிகள் வீணடிப்பிற்கு
முழுப் பொறுப்பு.
எங்கிலும் காகம்
என்னைக் கன்டுபிடித்து
கிட்ட நின்று
கத்திக்கத்தியே
என் கவிதைகளில்
தனக்கும் - ஒரு
கதிரை போட்டுக் கொள்கிறது.
உத்தியோகபூர்வ மொழி
நெனப்புப் பெருத்த மழை
குட்டி நட்டிகளைக் கூத்தாடவைத்து
கருவாடு காயப் போட்டவனைக் கவலைக்குள்ளாக்கி
தோட்டக்காரனை ஆசுவாசப்படுத்தி
சேரிப்புறத்தை சேறாக்கி நரகலையும் கிளறி
மாட்டைக் குளிப்பாட்டி
கொட்டில் குடிசைகளை எல்லாம் நசலாக்கி
கழுவிக் காயப்போட்ட என் உடுப்பையும்
ஈரத்தொப்பாக்கிவிட்டு
அதன் பாட்டில் கிளம்பிப் போய்விட்டது
எந்தவகையிலும்
என்னிடம் மன்னிப்புக் கேட்காமல்
இயலாமையின் மீதான தாக்குதல்
மோட்டார்சைக்கிள் கைப்பற்றப்பட்டது.
இனி சுற்றித்திரிய வேண்டும்
'யாருடன் சேர்ந்து?' என்பதே
என்னை எதிர்கொண்ட பெரிய சவால்...
தேடிச்சென்ற நண்பனும் வெளியூரில்
எனக்கிருந்த நட்பும் அவனுடன் மட்டும்தான்
கடற்கரையையும் அலசியாகிவிட்டது
தெரிந்த முகம் எதுவுமில்லை
அன்றுதான் புரிந்தது
என் நட்புறவாடலின் சீத்துவம்...
சுறுக்காகவே வீட்டை அடைந்தேன்.
தம்பியின் முகத்தில் சந்தோஷத் ததும்பல்
அவனுக்குத்தான் எத்தனை நண்பர்கள்..!!!!
இப்பொழுதெல்லாம்
மோட்டார் சைக்கிளுக்காக மட்டுமல்ல
வேறு எதற்காகவும்
அவனுடன் மல்லுக்கட்டுவதில்லை
அவன் மோட்டார் சைக்கிளை
'ஸ்டாட்'பண்ணும் சத்தம்
என் இயலாமையின் மீதான
AK47 தாக்குதல் சத்தமாகவே
மனதை நெருவலாக்குகின்றன...
நான்
புரியாமை
உயிருடன் கொண்டு வந்து கொடுத்த
குளத்து மீனை
நாவுக்கு ருசியாக கறியாக்கித் தரும்
என் தாய்,
விழுந்துடைந்து போன
தொட்டியில் வாழ்ந்த மீன்களுக்காக
அதிகம் வருத்தப் பட்டதோடு
காரணமான தம்பியையும்
அடித்து அழவைத்தது
ஏன் என்று இன்னும் புரியவில்லை..
திடீரென
பின்னால்
நெருங்கி வரும் காலடில் சத்தங்கள்
செவிச் சோனையைச் சுறண்ட
திடீர்த் திரும்பல்...!
நானும் திணுக்கெறிந்தேன்
வந்த
நாயும் திணுக்கெறிந்தது.
நரகலாக்கப்பட்ட ஆசைகள்
தனிமையும் கலைக்கப்படும்
என் கை ரோமங்களுக்கிடையே
தனிமையில்
உன்னிப்பாக உணவு தேடும்
எறும்பு...
கறண்டுக் கம்பி மேல்
ஒத்தையாக நின்று கொண்டு
கத்திக்கத்தியே
என்னைக் கடுப்பாக்கும்
காகம்.
நீர்ப்பரப்பில்
தன் கூட்டத்தைக் கைவிட்டு
ஏகமாய்
அசைந்து அலையும் ஆத்துவாழை,
அதில் ஒத்தையாக குடியிருக்கும்
ஊதாப்பூ...
கடலலை கரைசேர்த்து விட்ட
எவளோ ஒருத்தியின்
ஒத்தைச் செருப்பு...
இன்று எல்லாமே
என்னைப் போல்
தனிமையில் ஒத்தையாக...
நாளை
என் தனிமையும் கலைக்கப்படும்...
நானும்எறும்புக் கூட்டத்துடன் கூடித்திரிவேன்..
காகங்களுடன் காகங்களாக 'காக்காக்' கத்துவேன்..
ஆத்துவாழைகளுடன் அலைந்து திரிவேன்..
ஒத்தைச் செருப்புடன்
என் சப்பாத்தையும் மாட்டிக் கொண்டு
ஊர் லாத்துவேன்...
நிலவு மறைக்கும் மேகங்கள்
ஒரு கல்லின் அதட்டல்
சில சமயங்களில் கண்ணீர்
ஆழம் எட்டாத சோகங்களின்
மொழிபெயர்ப்புகளாய்
சில சமயங்களில்...
வான் எல்லை தொட்டுவிட்ட
பரமதிருப்தியில்
கண்களின் சந்தோஷப் பிரசவங்களாய்
சில சமயங்களில்...
தூசுகளின் அதட்டலால்
பயத்தில் ஒழுகும் மூத்திரமாய்
சில சமயங்களில்...
தன்னைக் கொன்று
உடலைக் கீலங்கீலமாய் குதறியவர்களுக்கு
சிதிலமான வெங்காயங்கள்
உணர்த்துகிற
குற்ற உணர்வின் வலிகளாய்
சில சமயங்களில்...
பஞ்சம் தண்ணீருக்குத்தான்
இங்கு
தண்ணீருக்குத்தான் பஞ்சம்
கண்ணீருக்கல்ல.
எங்கள் கண்ணீரையெல்லாம்
காப்பாற்றிச் சேகரித்திருந்தால்
வறண்டு வெடித்த பூமியையே
வளமான வனாந்தரமாக்கியிருக்கலாம்
அத்தம்..[டூ]
பேனையும் கொப்பியும்
பேசாமல் கிடக்கின்றன
நானும் புத்தகமும்
அத்தம் போட்டுக்கொண்டதால் ...
கனவுகள்
கனவுகள்
லட்சியம் செய்பவைகள்
உருப்பெறும்
முதற் கருவறை
அடக்கப்பட்ட நிறைவேறா ஆசைகள்
மகிழ்ச்சியாக உலாவரும்
சுதந்திர தேசம்
ஈழத்திலிருந்து ஒரு குரல்
இறுக்கப்பட்ட தொண்டையிலிருந்து
சிக்கித்திணறி வெளிப்படுகிறது
வலியின் வேதனைகளாய்
கசங்கிய கதறல்கள்......
உலகம் அதை
கவிதையின் உச்சம் என்கின்றன
கலையம்சத்தின் அற்புதம் என்கின்றன
இன்னும் சில இஸங்களுடனும்....
எங்கள் வாழ்வின்
வன்மம் விலக்கி கோரம் நீக்க
என்ன செய்துவிடப் போகின்றன....?
ரசிப்பதைத் தவிர..!
குற்ற உணர்வின் சொறிச்சல்
முகமூடிகளுடனேயே வாழப்பழகிவிட்டதால், அந்தந்த இடங்களில் கோபத்தை கொட்டிவிட இயலாமல், வீட்டிற்கு வந்து உம்மா, தம்பி,தங்கச்சி,வீட்டுப் பூனை என்று அனைத்து நெருங்கிய பிணைப்புகளின் மீதும் ஒரு காட்டு காட்டிவிட்ட பிறகுதான் மனம் அடங்கி ஆறிப்போகும்.அதுவும் சும்மா- வந்த வரத்துக்கு கொட்டுவதில்லை;அவர்கள் செய்கிறதில்,செய்தவற்றில் உள்ள குறைகளையெல்லாம் குறிப்பெடுத்து பட்டியல் போட்டுத்தான் ஒரு கை பார்துவிடுவேன்...
நான் ஏன் இப்படிப் பச்சக் களிசற மாதிரி நடந்து கொள்கிறேன் என்றே தெரியவில்லை?
வெளியில் அணிந்து கொள்ளும் முகமூடியையே வீட்டிற்குள்ளும் அணிந்து கொள்வதே சர்வ பொருத்தமாக தோண்றுகிறது.
குர்ஆனையும் நபி மொழியையும் வாசிக்கும் பொழுதெல்லாம் என் அர்த்தமற்ற இயலாமையின் மீதும் களிசறத்தனத்தின் மீதும் சாட்டையடிகள் சரமாரியாகப் பின்னியெடுக்கின்றன.
வெளியில் நல்ல பிள்ளையாக சுத்தித்திரியும் நான் வீட்டில் ஏன் களிசறத்தனத்தை வெளிப்படுத்துகிறேன்?... வீட்டை ஏமாற்றுகிறேனா அல்லது சமூகத்தை ஏமாற்றுகிறேனா என்று பட்டிமண்றம் ஒண்றை ஏற்பாடு செய்து விவாதித்தால், இரண்டையும் தான் அப்பட்டமாக ஏமாற்றுகிறேன் என்ற லியோனியின் பதில்தான் கட்டாயம் கிடைக்கும்...!.
"தன் குடும்பத்திற்கு சிறந்தவரே உங்களில் சிறந்தவராக இருக்க முடியும்" என்ற தூதர் முகம்மதின் வார்த்தை எவ்வளவு எதார்த்தமான திவ்வியம் தெறிக்கும் ஜீவ வாக்கு.
வீட்டில் மூர்க்கன் வெளியில் தர்மன்
மொத்தத்தில் முழுத் துரோகி.
அடித்துச் சொல்லலாம் நான் நல்ல கெட்டவன், சிறந்த களிசறை என்று.
இந்தக் குற்றவுணர்வை ஓரளவு மழுப்ப, என்னைப் போல்தானே பெரும்பாலானவர்கள் போலியாகத் திரிகிறார்கள் என்று அவர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.
எனக்கு அதில் உடன்பாடில்லை.
நான் குற்றவாளிதான்.ஆனால் தொடர்ந்து இந்தக் குற்ற உணர்வுடனேயே இனியும் வாழ என்னால் சம்மதிக்க முடியாது.
"தாங்களாக மாறிக் கொள்ளாத வரை இறைவன் எவரையும் மாற்றிவிடப் போவதில்லை" -அல் குர்ஆன்-
விசித்திரமான வழிகாட்டி
எங்கூரில் இயற்கையின் உச்சமாக
நாங்கள் உணர்ந்துகொண்ட நீர் நிலப்பிரதேசம்.
கடலுடன் கைகோர்த்துத் தாம்பத்தியதில் கலந்துகொள்ள
பருவவயது அடையக் காத்திருக்கும்
ஆறு என்றோ குளம் என்றோ கூறிக்கொள்ள முடியாத நீர் நிலைத் தளம்தான் தோணா.
அந்திப் பொழுதில் கடல் காற்றுடன் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.
தன் காதுகளுக்கு மாத்திரம் கேட்குமளவிலான கடலின் முணுமுணுப்புக்களிலிருந்தும் தொடர்ச்சியான மூச்சுவிடுதலிலிருந்தும்
பெற்றுக்கொள்ளும் தாளகதியிலான காற்றினால்-தோணா
தன் மேற்பரப்பில் புதிரான ஓவிய ரேகைகளை வரைந்து வரைந்து அழித்துக்கொள்கிறது.
தோணாவின் ஒரு கரைப்பகுதியில்
காகங்களின் குதூகலமான நிர்வாணக்
குழியல்.
இறந்த காலப் புழுதிகளையும் ஊத்தைகளையும் கழுவிவிட்டு உதறிக்கொண்டிருக்கிண்றன.....
நாம் தான் புழுதிக்குள் புறண்டுகொண்டு ஊத்தைகளுடன்
ஊத்தயர்களாக உலாவுகிறோம். இறந்தகால அசிங்கங்களிலாலான பூச்சுக்களால் வாழ்வின் பொலிவிழந்து அர்த்தமற்று அலைந்து திரிகிறோம்.
பறவைகளின் அலாதியான சந்தோஷமும் உற்சாகமும் பார்க்கும் கணம்தோறும் பரவசப்படுத்துகின்றன.
எதிர்காலத்தைப் பற்றிய அதீத எதிர்பார்பின்மையும் இறந்தகால கசப்புணர்வின்மையும்தான் அவைகளின் உற்சாகமான இயங்குதலுக்கு ஆதாரவிசைகள்.
இங்கு ஜீவிதம் செய்யும் 'மனிதன்' தவிர்ந்த இயற்கைஉயிரிகளுக்கு அவைகளின் எதிர்காலம் குறித்து எதிர்பார்ப்புகள் இல்லையென சொல்ல முடியாவிட்டாலும்
அதீத எதிர்பார்ப்பின்மையால்தான் அதுகளால் உல்லாசிக்கமுடிகின்றன.
உண்மையில் அதீதம் அனைத்து அழிவுகளுக்கும் இட்டுச்செல்லும் ஆரம்பத்தெறிப்பு .
இவையெல்லாம் தோணாவை வந்தடைந்த கணப்பொழுது
என்னில் ஊன்றப்பட்டவைகள்....
இயற்கை விசித்திரமான போதகன்;
அவன் உரையை செவிமடுப்பவர்களே அவனால் வழிகாட்டப்படுகிறார்கள்.
இயற்கை வினோதமான கண்ணாடி;
அவன் அழகை ரசிப்பவர்களே மென்மையான மநோநிலை கொண்டவர்களாக பரிணமிக்கிறார்கள்.
இயற்கை இதமான அரவணைப்பூட்டும் தாய்;
அவள் மடியில் அரவணைப்பைப் பெறுபவரகளே மற்றவர்களையும் அரவணைக்கிறார்கள்.
உண்மைதான்
இயற்கை விசித்திரமான போதகன்
அவன் உரையை செவிமடுப்பவர்களே அவனால் வழிகாட்டப்படுகிறார்கள்






















