காத்திருப்பு இதுகால வரைக்கும் கடுப்பாகத்தான் இருந்து வருகிறது.அர்த்தமான காத்திருப்புகள் குறித்து அவ்வளவாக கொந்தளிக்காவிட்டாலும், அர்த்தமற்ற மொக்குத்தனமான காத்திருப்பு என்னுடன் விபத்தாகும் போதுதான் கொதிக்கும் திராவகம் காலிலிருந்து தலைக்கேறி விடுகிறது.
முகமூடிகளுடனேயே வாழப்பழகிவிட்டதால், அந்தந்த இடங்களில் கோபத்தை கொட்டிவிட இயலாமல், வீட்டிற்கு வந்து உம்மா, தம்பி,தங்கச்சி,வீட்டுப் பூனை என்று அனைத்து நெருங்கிய பிணைப்புகளின் மீதும் ஒரு காட்டு காட்டிவிட்ட பிறகுதான் மனம் அடங்கி ஆறிப்போகும்.அதுவும் சும்மா- வந்த வரத்துக்கு கொட்டுவதில்லை;அவர்கள் செய்கிறதில்,செய்தவற்றில் உள்ள குறைகளையெல்லாம் குறிப்பெடுத்து பட்டியல் போட்டுத்தான் ஒரு கை பார்துவிடுவேன்...
நான் ஏன் இப்படிப் பச்சக் களிசற மாதிரி நடந்து கொள்கிறேன் என்றே தெரியவில்லை?
வெளியில் அணிந்து கொள்ளும் முகமூடியையே வீட்டிற்குள்ளும் அணிந்து கொள்வதே சர்வ பொருத்தமாக தோண்றுகிறது.
குர்ஆனையும் நபி மொழியையும் வாசிக்கும் பொழுதெல்லாம் என் அர்த்தமற்ற இயலாமையின் மீதும் களிசறத்தனத்தின் மீதும் சாட்டையடிகள் சரமாரியாகப் பின்னியெடுக்கின்றன.
வெளியில் நல்ல பிள்ளையாக சுத்தித்திரியும் நான் வீட்டில் ஏன் களிசறத்தனத்தை வெளிப்படுத்துகிறேன்?... வீட்டை ஏமாற்றுகிறேனா அல்லது சமூகத்தை ஏமாற்றுகிறேனா என்று பட்டிமண்றம் ஒண்றை ஏற்பாடு செய்து விவாதித்தால், இரண்டையும் தான் அப்பட்டமாக ஏமாற்றுகிறேன் என்ற லியோனியின் பதில்தான் கட்டாயம் கிடைக்கும்...!.
"தன் குடும்பத்திற்கு சிறந்தவரே உங்களில் சிறந்தவராக இருக்க முடியும்" என்ற தூதர் முகம்மதின் வார்த்தை எவ்வளவு எதார்த்தமான திவ்வியம் தெறிக்கும் ஜீவ வாக்கு.
வீட்டில் மூர்க்கன் வெளியில் தர்மன்
மொத்தத்தில் முழுத் துரோகி.
அடித்துச் சொல்லலாம் நான் நல்ல கெட்டவன், சிறந்த களிசறை என்று.
இந்தக் குற்றவுணர்வை ஓரளவு மழுப்ப, என்னைப் போல்தானே பெரும்பாலானவர்கள் போலியாகத் திரிகிறார்கள் என்று அவர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.
எனக்கு அதில் உடன்பாடில்லை.
நான் குற்றவாளிதான்.ஆனால் தொடர்ந்து இந்தக் குற்ற உணர்வுடனேயே இனியும் வாழ என்னால் சம்மதிக்க முடியாது.
"தாங்களாக மாறிக் கொள்ளாத வரை இறைவன் எவரையும் மாற்றிவிடப் போவதில்லை" -அல் குர்ஆன்-
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment