By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

தன்னிலை குறித்த புரிதல்

ஸ்.ராமகிறுஷ்ணனின் எழுத்துகளுக்கு நான் எப்பொழுதும் அடம் பிடிக்கும் குழந்தை தான்.பொம்மை கேட்டு அடம் பிடிப்பது போல் அவர் எழுத்துக்களை ஸ்பரிசித்துப் பார்த்துவிட காலத்திடம் கெஞ்சி வற்புறுத்தி வேண்டுகோள்களால் பரிதாபப்பட வைத்துவிடுவேன். மனமிரங்கிய காலமும் எனக்குரிய அத்தனை வேலைகளையும் இடையில் புகுந்து விடாமல் ஒரு மூலையைப் பார்த்து ஒதுக்கித் தள்ளிவைத்து விடும்.

இலக்கிய ஆர்வமும் , ராமகிறுஷ்ணனின் எழுத்துக்கள் மீதான ஆர்வமும் நண்பன் பூவனிடமிருந்து ஒட்டுண்ணியைப் போல் என்னில் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு எனதான மற்றைய பல விடயத்துவங்களையும் ஏனையவற்றின் மீதான ஈடுபாடு, கரிசனை, கால நேரம் என்று அத்தனையையும் உறிஞ்சி இன்றைய என் நினைவுகளை ஆக்கிரமித்து நிற்கின்றன.

ஆடு,மாடு மேய்ப்பதென்றாலும் அரசாங்கத்தின் மாடுகளைத்தான் மேய்த்தாக வேண்டும் என்ற கண்டிப்பான எதிர்பார்ப்புகளால் நிர்மாணிக்கப்பட்ட சமூக அமைப்பில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் , எனதான இலக்கிய ஆர்வத்துடன் அடிக்கடி சண்டை போட்டு மனப்பரப்பில் வெறுமை நிலையை உருவாக்கி விரக்த்தி வெளியில் கைவிட்டு விடுகின்றன.பன்றிகளைப் பராமரிக்கும் வேலை என்றாலும் பரவாயில்லை அரசாங்க வேலை ஏதும் காலியாக இருந்தால் தயை கூர்ந்து அறிவித்து விடுங்கள்...

நேற்றிரவும் அப்படித்தான... ஆழ்கடல் இறங்கி மிகுந்த அவதானத்தோடு சுழியோடும் மனோ நிலையில் ஸ்.ராமகிறுஷ்ணனின் எழுத்துகளுக்கும் அவைகள் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியல்களுக்குமிடையே மூழ்கி அலைந்து கொண்டிருந்தேன்...

இப்பொழுதெல்லாம் எதைப் பற்றி வாசித்தாலும் வாசிப்பு நிகழும் பொழுதே வாசிக்கப் படும் அத்தனையும் ஒன்றுவிடாமல் காட்சிப் படிமங்களாக மனதில் அசைந்து அலைகின்றன.விபரிக்கப்படும் இடங்கள், சம்பவங்கள், உணர்வுகள் என்று எல்லாவற்றையும் இயற்கையான ஈரலிப்புடன் ஸ்பரிசித்துப் பார்க்கின்றன.அப்படித்தான் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தேன்..

ஆழ்ந்த தியானத்தில் நிசப்த வெளிகளின் மீது பயணித்துக் கொண்டிருப்பவனை உசுப்பிப் பார்க்கும் விதத்திலான ஒரு குரல் திடுமெனத் தாக்கி அமைதியைக் குலைத்து புத்தகத்தை விட்டும் கண்களைத் திருப்பிவிட்டன.

"புத்தகத்துக்குள்ள அப்படி என்னத்த மறச்சி வச்சிக்கி கடுமையா பாத்துக்கிருக்கயள்?"

என் சிந்தனை நரம்பின் தொடர்ச்சியை தறித்து வலியை ஏற்படுத்திய குரலுக்கு உரிமையாளன், எங்கள் முன் வீட்டில் குடியிருப்பவன்.36km தூரம் தள்ளி இருக்கும் ஊரான 'காத்தான் குடியைச்' சேர்ந்தவன்.எங்கட ஊரில் உள்ள ஒரு உடுப்புக் கடையில் வேலை பார்க்கும் பொடியன்.இரவு எட்டரை மணி தாண்ட நேராக வீட்டுக்குத்தான் வருவான்.பேச ஆள் கிடைக்காவிட்டால் என்னுடன் தான் எதையாவது பேசிக்கொண்டு கரைச்சல் படுத்துவான்.சிலநாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது அவன் ஒரு "பொடியன் மாஸ்டர்" என்று .அவனுடன் சகஜமாக சிரித்துப் பேசும் என் தம்பியையும் எனி ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையையும் உருவக்கிவிட்டான் அந்த வளப்புனி.இரவு 9.00மணியளவில் எங்கள் ரோட்டின் தொங்கலில் அமைந்துள்ள கொத்துக் கடைக்குச் சாப்பிடச் சென்றுவிடுவான்.அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பிறருக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்வதை பல முறை கண்டு வியந்திருக்கிறேன்.

தியானம் குலைந்து போன கடுப்பில் "என்னத்த வச்சிக்கிட்டு பாக்கோணும் எண்டு எதிர்பாக்கயள்?" என்று கொஞ்சம் தடிப்பாகவே கேட்டுவிட்டேன்.

"ஒங்களை எல்லாம் லேசில நம்பேலா.."

"நீங்க நம்போணும் என்ற எந்த அவசியமும் எனக்கில்ல"..சற்று மிதப்போடுதான்
என்னிடமிருந்து இந்த பதில் கறாராக வெளிப்பட்டது.

அவன் எதை நினைத்துக் கேட்டிருப்பான் என்று உங்களால் ஊகிக்க முடிகின்றதா..? வேறொன்றுமில்லை பரந்த மனது படைத்த நமீதா மற்றும் லக்ஷ்மிராய் போன்ற உடல் தானப் பிரியைகளின் கொடைகளை நடுப்பக்கத்தில் போட்டு விற்பனையையும், நாக்கு வெளியில் தொங்கும் சிறந்த வாசகர்களையும் சூடு பிடிக்கவைக்கும் நாட்டுக்குகந்த பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றை மடித்து வைத்துக் கொண்டு கர மைத்துணம் செய்ய ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கிறேன் என்ற வெளிக்குத்துதான் அவன் வினவியதன் முழு மொத்த எதிர்பார்ப்பு...

என்னுடைய அந்த பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காதவன் , எங்கிருந்தோ வலிந்து இழுத்து எடுத்த நமட்டுச் சிரிப்பொண்றை உதட்டில் அப்பிக் காட்டிவிட்டு கிளம்பிவிட்டான்.

என் பதில் நிச்சயம் அவனை சங்கடப்படுத்தி இருக்கவேண்டும்.என் எதிர்பார்ப்பும் அதுதான்.நான் ஒன்றும் இயேசுவோ மகாத்மாவோ அல்ல; பழிவாங்குவதில் 'நான் மகான் அல்ல' கார்த்திக்கைவிட மோசமானவன்.இந்த மனோநிலையை மாற்றிக் கொளும் படி 'மனசாட்சி' இன்றுவரை 'நான்' என்ற அதீதத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டுதான் கிடக்கின்றது...

அவன் சென்ற பிறகும் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.சொற்ப நொடிக்குள் நிகழ்ந்துவிட்ட அவனுடனான உரையாடல் தான் என் நினைவுப் பாறைகளில் கலடலைகளாக மோதிக்கொண்டன.
"ஒங்கள எல்லாம் லேசில நம்பேலா" இந்த வார்த்தைகள் குறித்தும் அதற்கான என் பதில் குறித்துமே நினைவலைகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

இதுபோன்ற ஏதாவது தொந்தரவான உரையாடல் நிகழ்ந்துவிட்டால் தான் மனம் கார்ல் மாக்ஸ் மாதிரி ஆய்வு செய்யத் துவங்கிவிடும்.

நம் வாழ்க்கையின் எதார்த்தத்தை அலசிப் பார்த்தால்... நம்மில் பலரும் மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்காகத்தான் போலியாக இயங்கிக் கொன்டிருக்கிறார்கள்.தங்களைச் சுற்றிலும் பொதுப் புத்தியின் வழியிலான புனிதத்தை வலிந்து கட்டமைத்துக் கொண்டும் அதனைக் கஸ்டப்பட்டுக் காப்பாற்றி தக்கவைத்துக் கொண்டும் , பிறரிடம் தன்னைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தைக் காட்சிப்படுத்தி நம்பவைப்பதற்காகவமுமே இயன்றமட்டும் பாடுபடுகிறார்கள்.

இந்த மனோநிலையில் உள்ளவனின் குரல் தான் "ஒங்கள எல்லாம் லேசில நம்பேலா" (இப்ப இவன நம்பச் சொல்லி யார் அழுதா?) அவன் என்னைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தை நம்பவைக்குமாறு சாடையாச் சொல்கிறான். நானோ இருளின் சினேகிதன்.இருளின் நண்பன் என்பதற்காக ஓளியின் எதிரியாகத்தான் இருக்க வேண்டும் என்று 'டுவலிசப்' போக்கில் என்னைக் கட்டமைத்துவிட வேண்டாம்.

அவனுடைய வினாவிற்கு எந்த ஒரு முன் யோசனையுமின்றி என்னிடமிருந்து வெளிப்பட்ட பதில் " நிங்க நம்போணும் என்ற எந்த அவசியமும் எனக்கில்ல".
உண்மையில் இது ஒரு வகை சுதந்திரத்தை சுட்டி நிற்கும் வாசகம்.எந்த ஒரு நிர்ப்பந்தத்திற்கும் அவசியப்பாட்டிற்கும் கைதாகி சிறைப்பட விரும்பாத மனோநிலையின் வெளிப்பாடு. எதார்த்தத்தில் இது தான் நான்.

நம்முடைய இயல்பான எதார்த்த நிலை இத்தகைய சடுதியான நிகழ்வுகளின் போதுதான் அப்பட்டமாக வெளிப்படுகிறது.இது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் தான் நம்மைப் பற்றி நமக்கே புரியவைத்து விடுகின்றன.

அந்தத் தருணத்தில் 'இது தான் நான் என' புரிந்து கொள்ள உதவி செய்த அவனுக்கு கட்டாயம் நன்றி சொல்லிவிட உறுதி செய்து கொண்டேன். இருந்தாலும் சிறிது தயக்கம்;நன்றி தெரிவித்தபின் 'ராத்திரி ரூமுக்கு வாங்களேன்' என்று அவன் கூப்பிடமால் இருந்தால் சரி.
  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment